நெல்லையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
நெல்லையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை:
நெல்லையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஊரடங்கில் தளர்வுகள்
கொரோனா பரவல் தமிழகத்தில் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் பல தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. தொற்று குறைந்த மாவட்டங்களில் அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் பஸ் போக்குவரத்து தொடங்கியது. நேற்று முன்தினம் 50 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. இருந்தாலும் பல கிராமங்களுக்கு பஸ் செல்லவில்லை என்று புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து நேற்று 75 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
பயணிகள் கூட்டம்
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இயக்கப்பட்ட அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. டிரைவர், கண்டக்டர்கள் முககவசம் அணிந்து இருந்தனர்.
நெல்லையில் இருந்து தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மதுரை ஆகிய ஊர்களுக்கு சென்ற பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
குறிப்பாக நாகர்கோவில் செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அந்த பஸ்களில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் முண்டியடித்து ஏறினார்கள். சில பஸ்களில் பயணிகள் நின்று பயணம் செய்தனர். அந்த அளவுக்கு கூட்டம் இருந்தது. மேலும் கலியாவூர், சுரண்டை, சேரன்மாதேவி உள்ளிட்ட ஊர்களுக்கு கிராமங்களின் வழியாக செல்லக்கூடிய பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
1,200 பஸ்கள் இயக்கம்
நெல்லை பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை முதல் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நெல்லை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 1,200 பஸ்கள் இயக்கப்பட்டன.
நெல்லை மாநகர பகுதிகளில் இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் மட்டும் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. டவுன் பஸ்களில் கூட்டம் குறைவாக இருப்பதால் சில ஊர்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் கிராம மக்கள் தங்கள் ஊர்களுக்கு பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.