பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை காலதாமத கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை காலதாமத கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெரம்பலூர்:
தமிழ்நாட்டில் பிறப்பு- இறப்பு குறித்து வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில் அதாவது பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இது பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டம் 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு விதிகள் 2000-ன் படி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்திற்கு பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் ஒரு மாதத்திற்குள் காலதாமத கட்டணம் ரூ.100 ஆகவும், ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு ஆண்டிற்குள் ரூ.200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், முதல்-அமைச்சரின் உத்தரவின்படி 1.1.2020 முதல் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு குறித்த கட்டண விலக்கு அளிக்கப்பட்டு, காலதாமத கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும். இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீட்டினை அரசே ஈடு செய்யும். இருப்பினும் உரிய காலத்தில் பிறப்பு, இறப்பினை பதிவு செய்திட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.