காரில் கடத்திய மண்ணுளி பாம்பு பறிமுதல்
கேரளாவில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் கடத்திய மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேருக்கு ரூ.2¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
கேரளாவில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் கடத்திய மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேருக்கு ரூ.2¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மண்ணுளி பாம்பு கடத்தல்
கேரளாவில் இருந்து நாகர்கோவிலுக்கு மண்ணுளி பாம்பை கடத்தி வருவதாக பூதப்பாண்டி வனச்சரக அதிகாரி திலீபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வனவர்கள் ரமேஷ், பிரசன்னா மற்றும் வனக்காப்பாளர்கள் சக்திவேல், ஆல்வின் ஆகியோர் நேற்று வடசேரி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட ஒரு கார் வந்தது. வனத்துறையினர் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். காரின் பின்பகுதியில் 2.200 கிலோ எடையுள்ள மண்ணுளி பாம்பு பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அபராதம்
தொடர்ந்து காரில் வந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த், சதீஷ் சந்திரன் நாயர் மற்றும் களியக்காவிளையை சேர்ந்த ஜோஸ் வில்பர்ட் என்பதும், இவர்கள் கொல்லம் மாவட்டத்தில் இருந்து மண்ணுளி பாம்பை கடத்தி நாகர்கோவிலில் விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்து அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.75 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2¼ லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மண்ணுளி பாம்பை ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் விட்டனர்.