அதிக பாரம் ஏற்றிச்சென்ற 5 லாரிகள் பறிமுதல்
பெரம்பலூர் அருகே அதிக பாரம் ஏற்றிச்சென்ற 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வரி செலுத்தாத பொக்லைன் எந்திர உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
லாரிகளில் அதிக பாரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய கட்டிட பொருட்களான அரளைக்கற்கள், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கல்குவாரி பொருட்கள் அதிக அளவில் கட்டிட கட்டுமானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அந்த வகையில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலக சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனரக லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச்செல்வதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு புகார்கள் சென்றன.
அதன்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டிப்பர் லாரிகளை நிறுத்தி, திடீர் வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையில் டிப்பர் லாரிகளில் அனுமதிக்கப்பட்ட பர்மிட் அளவைவிட அதிகமான அளவில் பாரம் ஏற்றிச்சென்றது தெரியவந்தது.
ரூ.3½ லட்சம் அபராதம்
இதுதொடர்பாக 5 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மண் அள்ள பயன்படுத்தும் பொக்லைன் எந்திரத்திற்கு வரி செலுத்தாமல் இயக்கி வந்தது சோதனையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த எந்திரத்தின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
அரசு விதிமுறைகளை மீறி அதிக அளவில் பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களை அவ்வப்போது கண்டறிந்து, அபராதம் விதிப்பதுடன் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வாகன வரி செலுத்தாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.