சூளகிரி அருகே, பணத்திற்காக விவசாயி கடத்தி கொலை: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது கிருஷ்ணகிரி கோர்ட்டில் 4 பேர் சரண்
சூளகிரி அருகே பணத்திற்காக விவசாயி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேர் நேற்று மாலை கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
சூளகிரி:
விவசாயி கடத்தி கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் முருகப்பா என்கிற முருகன் (வயது 50). விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி தனது விவசாய நிலத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, மோட்டார்சைக்கிளில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது மனைவி ரெஜினம்மா சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் முருகனை தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த 23-ந் தேதி ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரம் அருகே ராஜாபுரத்தில் முருகன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை தொடர்பாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கர் மற்றும் சூளகிரி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
இரட்டை கொலை வழக்கு
கொலை செய்யப்பட்ட முருகன் விவசாயி ஆவார். மேலும், உத்தனப்பள்ளி அருகே ஒரு அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தனப்பள்ளி அருகே காரில் வந்த ஓசூரை சேர்ந்த பெண் தொழில் அதிபர் நீலிமா, அவரது டிரைவர் முரளி ஆகியோரை கார் மீது லாரியை மோத விட்டு கூலிப்படை கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி கொலை செய்தது. அந்த வழக்கில், முருகன் 13-வது குற்றவாளி ஆவார். இதில், அவர் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். அவர் சிறையில் இருந்த காலத்தில், தேன்கனிக்கோட்டை தாலுகா குந்துமாரனப்பள்ளியை சேர்ந்த அம்ரிஷ் (26) என்பவர் சேலம் சிறையில் உடன் இருந்தபோது அவர்களிடையே பழக்கம்ஏற்பட்டது.
இந்த நிலையில் அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தனர். ஜாமீனில் வந்த முருகனிடம் நிலம் விற்ற பணம் ரூ.30 லட்சம் இருப்பதை அம்ரிஷ் தெரிந்து கொண்டார்.
பணத்திற்காக கடத்தல்
இதையடுத்து அவரை கடத்தி சென்று அவரது வீட்டிற்கு போன் செய்து பணத்தை கொடுத்தால் அவரை விட்டு விடுகிறோம் என மிரட்ட அம்ரிஷ் முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர்கள் ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த ஹரிஷ் (21), சூளகிரி அருகே சப்படி கிராமத்தை சேர்ந்த முருகன் (21) உள்பட 8 பேருடன் சம்பவத்தன்று முருகனை அவர்கள் ஜீப்பில் கடத்தினார்கள்.
அப்போது முருகன் வாகனத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யவே அவரை அந்த கும்பல் தாக்கினார்கள். மேலும் சத்தம் போடாமல் இருக்க அவரது மூக்கு, வாயை பொத்தியதில் அவர் இறந்து விட்டார்.
கைது-சரண்
இதையடுத்து அவர்கள், முருகனின் உடலை தொரப்பள்ளி அருகே கல்குவாரி ஒன்றில் தேங்கி இருந்த தண்ணீரில் போட்டு சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த குந்துமாரனப்பள்ளி அம்ரிஷ் (26), ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த கொத்தூர் ஹரிஷ் (21), சப்படி முருகன் (21) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில் முருகன் கொலையில் தொடர்புடைய நல்லகானகொத்தப்பள்ளியை சேர்ந்த சதீஷ் (25), வெங்கடேசன் (26), கனாப்பட்டி (23), சப்படியை சேர்ந்த நாகன் (23) ஆகிய 4 பேரும் கிருஷ்ணகிரி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மாலை மாஜிஸ்திரேட்டு பீட்டர் முன்னிலையில் சரண் அடைந்தனர்.
இந்த வழக்கில் பெல்லட்டியை சேர்ந்த பிரவீன் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.