தர்மபுரி அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை
தர்மபுரி அருகே குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
குடிநீர் பிரச்சினை
தர்மபுரி அருகே சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லாகவுண்டனஅள்ளி ஆதிதிராவிடர் காலனியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் 2 நாளைக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களாக இந்த குடிநீரும் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அந்த பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் அந்த கிராமத்தில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்தனர். அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆனால் அந்த இடம் எங்களுக்கு சொந்தமான இடம் என்றும், இதற்கு பட்டா வாங்கி விட்டதாகவும் ஒரு குடும்பத்தினர் அந்த இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
பெண்கள் மறியல்
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன் குடிநீர் தொட்டி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.