கருப்புக்கொடியுடன் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கண்டித்து மயிலாடுதுறையில் கருப்புக்கொடியுடன் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-29 17:46 GMT
மயிலாடுதுறை:
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கண்டித்து மயிலாடுதுறையில் கருப்புக்கொடியுடன் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக - தமிழ்நாடு எல்லை பகுதியான மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை கண்டித்தும், காவிரி நிபுணர் குழுவை கலைத்த மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா பாலம் அருகே கருப்புக்கொடி ஏந்தி காவிரி ஆற்றில் இறங்கி கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். 
கோஷங்கள் எழுப்பப்பட்டன
போராட்டத்தில் கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி நிபுணர் குழுவை கலைத்த மத்திய அரசை கண்டித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். 
சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தில் காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், கரும்பு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் முருகன், சாமிநாதன் மற்றும் விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்