ஆரணியில் சிலிண்டர், மொபட்டை பாடை கட்டி தூக்கி வந்து நூதன ஆர்ப்பாட்டம்
ஆரணியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிலிண்டர் மற்றும் மொபட்டை பாடைகட்டி தூக்கிவந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி,
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் ஆரணியில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. காந்தி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகி சி.அப்பாசாமி தலைமையில் ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர், மொபட் இரண்டையும் பாடைகட்டி தூக்கி வந்தனர். ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்தனர். பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பாண்டியராசா, ரவிச்சந்திரன், அருணகிரி, ம.தி.மு.க. நிர்வாகிகள் பச்சையப்பன், எஸ்.கே.ரத்தினகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், மோ.ரமேஷ், என்.முத்து, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜமால், முபாரக், ஜிலான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பி.கண்ணன், குப்புரங்கன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் எம்.கே.பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, சிமெண்டு விலை உயர்வை கோஷங்கள் எழுப்பியும், மத்திய அரசை பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.