கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற இளம்பெண் திடீர் சாவு

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற இளம்பெண் திடீரென இறந்தார். இதையடுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-29 16:44 GMT
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன் மகன் பிரேம்குமார் (வயது 30). இவர் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுபா (28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுபாவை பிரசவத்துக்காக நேற்று முன்தினம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு நீர்ச்சத்து குறைவாக இருப்பதாக தெரிவித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து உறவினர்கள் சம்மதத்துடன் அறுவை சிகிச்சை நடந்தது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் சிறிது நேரத்தில் சுபாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், அதற்குள் திடீரென சுபா இறந்தார். இதையடுத்து அவரது உடலை பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுபாவுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை வழங்காததை கண்டித்தும், அவரது உடலை மீண்டும் கோவில்பட்டிக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.  இதில் இந்து முன்னணி நகர தலைவர் சீனிவாசன், பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி, நகர தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள், இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முருகவேலு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சபாபதி, சுஜித் ஆனந்த், பத்மாவதி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால், போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இதையடுத்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் முருகவேல், துணை இயக்குனர் டாக்டர் அனிதா, உதவி கலெக்டர் சங்கர நாராயணன், தாசில்தார் அமுதா மற்றும் அதிகாரிகள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். தொடர்ந்து ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் அறையில் சுபாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் உரிய விசாரணை நடத்தப்படும் என அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.  குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பெண் இறந்ததும், உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்