நாமக்கல் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பரமத்திவேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பரமத்திவேலூர் நான்கு ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி தலைமை தாங்கினார். பரமத்தி வேலூர் வட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரன், பொன்னம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெறவேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க வேண்டும். தடையின்றி அனைவருக்கும் தடுப்பூசி போட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்கூட்டரை முன் நிறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.
பட்டணம்
ராசிபுரம் அருகேயுள்ள பட்டணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பிரதேச செயலாளர் செல்வராசு தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் முருகேசன், செங்கோட்டையன், ராணி, நாகூர் கனி, தங்கமணி, சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டு முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வருமான வரி வரம்புக்குள் வராத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும். தனிநபர் ஒவ்வொருவருக்கும் மாதம் 10 கிலோ உணவு தானியங்கள் 6 மாதத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
எலச்சிபாளையம்
இதேபோன்று திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொறுப்பாளர் மணிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஆதிநாராயணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிர்வாகிகள் செங்கோட்டுவேல், சுரேஷ், வெங்கடாசலம், ரமேஷ், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மொபட்டை கீழே போட்டு கோஷங்கள் எழுப்பினர்.
மோகனூர்
மோகனூர் ஒன்றிய தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மோகனூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினர். ஒன்றிய இளம்புலிகள் அணி துணை செயலாளர் பாண்டியன் வரவேற்றார். நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் கோபி முன்னிலை வகித்தார். ஊடகப்பிரிவு மாநில செயலாளர் செந்தமிழன், மேற்கு மண்டல துணைச்செயலாளர், அறிவழகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் மாவட்ட துணைச்செயலாளர், சிவா, மாவட்ட இளைஞரணி செயலாளர் இளமுருகன், பரமத்தி வேலூர் தொகுதி செயலாளர் செல்வகுமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் அரவிந்த், ஒன்றிய நிதி செயலாளர் குமரேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளம்புலிகள் அணி துணை செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.