பெரியகுளம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தை

பெரியகுளம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-29 15:43 GMT
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த மலைக்கோவிலை சுற்றி கிரிவலப்பாதை உள்ளது. இந்த பாதையில் பொதுமக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த 23-ந்தேதி பொதுமக்கள் கிரிவலம் சென்றனர். அப்போது கிரிவலப்பாதைக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை அவர்கள் கண்டனர். 
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து பெரியகுளம் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து தேனி வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள மலைப்பகுதியில் 3 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாடும் காட்சிகள் பதிவாகின. இதையடுத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, சிறுத்தை நடமாட்டம் உள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் கூண்டு வைக்கப்பட்டது. சிறுத்தையை பொரி வைத்துபிடிக்க அந்த கூண்டில் ஆடு ஒன்றும் கட்டி வைக்கப்பட்டுள்ளது. 
மேலும் சிறுத்தையை பிடிக்கும் வரை கைலாசநாதர் கோவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள், பொதுமக்கள் குழந்தைகளுடன் தனியாக செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும் செய்திகள்