உத்திரமேரூர் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த 36 குழந்தைகள் உள்பட 43 பேருக்கு கொரோனா தொற்று

உத்திரமேரூர் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த 36 குழந்தைகள் உள்பட 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முழு கவச உடை அணிந்தவாறு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Update: 2021-06-29 05:58 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராாட்சி ஒன்றியம் களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெரியவர்கள் என 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்த உடன் இரவே, அந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும், தொற்று பாதிக்காதவர்களை பாதுகாப்பான மையங்களில் சேர்த்து நல்ல முறையில் கவனிக்கவேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 43 பேரும் காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் 43 பேரையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா முழு கவச பாதுகாப்பு உடை அணிந்து நேரில் பார்வையிட்டு நேற்று நலம் விசாரித்தார். மேலும் விரைவில் பூரண குணமடைவதற்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்தறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், காஞ்சீபுரம் கலெக்டர் மா.ஆர்த்தி, காஞ்சீபுரம் எம்.பி.க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.எழிலரசன் ஆகியோரும் கொரோனா முழு கவச பாதுகாப்பு உடை அணிந்து உடன் சென்றனர்.

இதையடுத்து மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம் களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் 74 சிறுவர், சிறுமிகள் மற்றும் 27 காப்பாளர்கள், உதவியாளர்கள் என பெரியவர்கள் மொத்தம் 101 பேர் இருந்தனர். அதில் 36 சிறுவர், சிறுமிகள் மற்றும் 7 பெரியவர்கள் என 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனைவரும் நலமுடன் உள்ளனர். நோய்த்தொற்று பாதிக்கப்படாதவர்கள் எழிச்சூர் கொரோனா பராமரிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து மா.சுப்பிரமணியன், உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வும் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர்.குருநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், இணை இயக்குனர் (மருத்துவ நலப்பணிகள்) டாக்டர் ஜீவா, துணை இயக்குனர் (சுகாதாரபணிகள்) டாக்டர். பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்