வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சி பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி டோக்கன் வழங்க வேண்டும்- பா.ம.க.வினர் கோரிக்கை
வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சி பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி டோக்கன் வழங்க வேண்டும் என்று பா.ம.க.வினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு
வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சி பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி டோக்கன் வழங்க வேண்டும் என்று பா.ம.க.வினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோரிக்கை மனு
ஈரோடு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணைப்பொருச்செயலாளர் எஸ்.சி.ஆர்.கோபால், நிர்வாகிகள் எம்.பி.வெங்கடாச்சலம், எஸ்.எல்.பரமசிவம், ஷேக் முகைதீன், பொ.வை.ஆறுமுகம், மனோகரன், சசிமோகன் உள்ளிட்டவர்கள் நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு வழங்கினார்கள். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் முன்பு டோக்கன்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி தடுப்பூசி மையங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் படை எடுத்து செல்கிறார்கள். சிலர் அதிகாலை 2 மணிக்கே வந்து வரிசையில் நிற்கிறார்கள். பின்னர் காலை 8 மணிக்கு அதிகாரிகள் வந்து 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கிறார்கள். இதனால் அதிகாலை 2 மணியில் இருந்து வந்து காத்திருக்கும் நூற்றுக்கணக்கானவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். மிகுந்த மன வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.
வாக்காளர் பட்டியல்
இதை தவிர்க்க, ஒவ்வொரு வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை எடுத்து அதன் அடிப்படையில் ஒரு நாளைக்கு எத்தனை ஊசிகள் போடப்படுகின்றனவோ, அத்தனைபேருக்கு மட்டும் உள்ளாட்சி பணியாளர்கள் மூலம் முன்கூட்டியே டோக்கன் வழங்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் சிரமமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள். கிராமங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளிலேயே சென்று ஊசி போட வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி மன்றங்கள் அளவில் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் டோக்கன்கள் வழங்கி, அந்தந்த ஊராட்சிகளில் அனைத்து வார்டு மக்களும் விடுபடாமல் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்தது.