கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 6 பேர் தற்கொலை

யாதகிரி அருகே கடன் தொல்லையால் பண்ணை குட்டையில் குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2021-06-28 20:41 GMT
யாதகிரி:

கடன் தொல்லை

  யாதகிரி மாவட்டம் சகாப்புரா தாலுகா தோரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயா(வயது 48). இவரது மனைவி சாந்தம்மா(36). இந்த தம்பதிக்கு சுமித்ரா(12), ஸ்ரீதேவி(12), லட்சுமி(8) என்ற மகள்களும், சிவராஜ்(9) என்ற மகனும் இருந்தனர். திம்மராயா விவசாயி ஆவார். அவர் விவசாயம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். மேலும் பயிர்சாகுபடி செய்வதற்காக வங்கிகளில் இருந்தும், தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்தும் திம்மராயா கடன் வாங்கி இருந்தார்.

  ஆனால் அவருக்கு விவசாயத்தில் போதிய லாபம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கடன் தொல்லையால் திம்மராயா அவதிப்பட்டு வந்தார். இதன்காரணமாக அவர் கடந்த சில தினங்களாக மனம் உடைந்து காணப்பட்டார்.

தற்கொலை செய்ய முடிவு

  இதற்கிடையே வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை திரும்ப செலுத்தும்படி திம்மராயாவுக்கு நோட்டீசு வந்தது. மேலும் கடன் கொடுத்தவர்களும், திம்மராயாவிடம் கடனை திரும்ப கேட்டு வந்தனர். இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த திம்மராயா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது மனைவி சாந்தம்மாவிடம் தெரிவித்து உள்ளார். அப்போது தானும் தற்கொலை செய்து கொள்வதாக சாந்தம்மா, திம்மராயாவிடம் கூறியுள்ளார்.

  ஆனால் நாம் 2 பேரும் இறந்து விட்டால் குழந்தைகள் அனாதையாகிவிடும் என்று கருதிய திம்மராயாவும், சாந்தம்மாவும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் தோரனஹள்ளியில் உள்ள பண்ணை குட்டைக்கு திம்மராயா, சாந்தம்மா, சுமித்ரா, ஸ்ரீதேவி, லட்சுமி, சிவராஜ் ஆகியோர் வந்தனர்.

குட்டையில் குதித்தனர்

  பின்னர் 6 பேரும் பண்ணை குட்டையில் குதித்தனர். சிறிது நேரத்தில் 6 பேரும் பண்ணை குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். இதுபற்றி அறிந்ததும் தோரனஹள்ளி கிராம மக்கள் சகாப்புரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரும், தீயணைப்பு படையினரும், உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் 6 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 6 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

  இந்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. இதன்பின்னர் 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சகாப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் குடும்பத்தினருடன் திம்மராயா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் கடன் தொல்லை மட்டும் தான் தற்கொலைக்கு காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாதகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்