பஸ்கள் ஓடின; ஜவுளி- நகைக்கடைகள் திறப்பு
அரியலூர் மாவட்டத்தில் பஸ்கள் ஓடின. ஜவுளி, நகைக்கடைகள் திறக்கப்பட்டன.
அரியலூர்:
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா வைரஸ் 2-ம் அலையின் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் சில கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை வருகிற 5-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஊரடங்கு நீட்டிப்பில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பெரம்பலூர்- அரியலூர் ஆகியவை 2-ம் வகை மாவட்டங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் ஏற்கனவே ஊரடங்கின்போது அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளுக்கு தற்போது கூடுதல் நேரம் திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் 2-வகையில் உள்ள பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்கவும், உடற்பயிற்சி கூடங்களை திறக்கவும், ஜவுளிக்கடை, நகைக்கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பஸ்கள் ஓடின
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் பஸ்கள் ஓடின. ஜவுளி, நகைக்கடைகள் உள்ளிட்டவை திறந்திருந்தன. இதில் அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் மினி பஸ்களும் ஓடின. திருச்சி, தஞ்சை, பெரம்பலூரில் இருந்து வந்து செல்லும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பயணிகள் கூட்டம் குறைந்த அளவே இருந்தது. ஆனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து சென்றதால் பஸ்களில் கூட்டம் இல்லை.
அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம், திருமானூர், செந்துறை, ஆண்டிமடம், அணைக்கரை, பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் ஓடின. பயணிகள் அனைவரும் முக வசம் அணிந்திருந்தனர். நகரில் ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் கதவுகள் முழுவதும் திறக்கப்படாமல் சிறிய அளவில் திறக்கப்பட்டு குறைவான அளவிற்கே வாடிக்கையாளர்கள் ஜவுளி மற்றும் நகை வாங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வாசலில் கிருமிநாசினி, முக கவசம் வழங்கப்பட்டது. கடைகளின் உள்ளே சமூக இடைவெளி விட்டு நிற்க வைக்கப்பட்டனர். அதிக அளவு கூட்டம் வந்தால் வெளியில் காத்திருக்க வைத்து உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்த பிறகு அனுமதிக்கப்பட்டனர். உணவு விடுதிகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் திறந்து வைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகளில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டன. கடைகள் திறக்கப்பட்டு இருந்தாலும் முன்பு நடந்த வியாபாரம் தற்போது இல்லை என்று வியாபாரிகள் கூறினார்கள்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டத்தில் பொது போக்குவரத்து நேற்று காலை 6 மணி முதல் தொடங்கியது. பஸ்களில் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களும், நகர்களில் இருந்து தொலைதூரம் செல்லும் பஸ்களும், பாதிப்பு இல்லாத மாவட்டங்களான சென்னை, திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் என 47 புறநகர் பஸ்களும், 23 நகர பஸ்களும் என மொத்தம் 70 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் தஞ்சாவூர், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், நாகை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
ஜெயங்கொண்டத்தில் நீலத்தநல்லூர் கொள்ளிடம் பாலம், அணைக்கரை கொள்ளிடம் பாலம் ஆகிய 2 இடங்கள் மாவட்ட எல்லைகளாக உள்ளன. இந்த 2 இடங்களையும் தாண்டி தஞ்சை, மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு கிருமிநாசினி வழங்கி, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டதாக பணிமனை அலுவலர் குணசேகரன் தெரிவித்தார். பயணிகள் குறைந்த அளவே பயணம் செய்தனர்.
தா.பழூர், விக்கிரமங்கலம், ஆண்டிமடம், தாமரைக்குளம்
தா.பழூர் பகுதி வழியாக ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் வழித்தடத்தில் பஸ்கள் மதனத்தூர் வரை இயக்கப்பட்டன. பஸ்களில் குறைந்த அளவே பயணிகள் பயணம் செய்தனர். ஜெயங்கொண்டத்தில் இருந்து மதனத்தூர் வழித்தடத்தில் 8 முறையும், சுத்தமல்லி வழித்தடத்தில் 8 முறையும், ஜெயங்கொண்டம்- தா.பழூர் வழித்தடத்தில் கூடுதலாக 4 முறையும் பஸ்கள் இயக்கப்பட்டன. தா.பழூரில் ஜவுளிக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு பஸ்கள் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. அரியலூரில் இருந்து விக்கிரமங்கலம் வழியாக முத்துவாஞ்சேரி மற்றும் ஸ்ரீபுரந்தான் வரை பஸ்கள் ஓடின. ஒரு சில பஸ்கள் பயணிகள் இல்லாமல் சென்று வந்தன. மேலும் விக்கிரமங்கலத்தில் ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக் கடைகள் திறந்திருந்தன. ஆண்டிமடம் பகுதியில் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் திறந்திருந்தன. பொதுமக்கள் ஆர்வமுடன் அவர்களுக்குத் தேவையான பொருட்களை சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கிச் சென்றனர். இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தாமரைக்குளம் பகுதியிலும் ஜவுளி, நகைக்கடைகள், பாத்திரக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கடை உரிமையாளர்கள் அறிவுறுத்தினர். தாமரைக்குளம் பகுதி வழியாக பஸ்களும் இயக்கப்பட்டன.