தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; மு.க.ஸ்டாலினுக்கு, காந்திய இயக்க தலைவர் விவேகானந்தன் கடிதம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அகில இந்திய காந்திய இயக்க தலைவர் விவேகானந்தன் கடிதம் எழுதியுள்ளார்.
செங்கோட்டை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய காந்திய இயக்க தலைவர் வி.விவேகானந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறிஇருப்பதாவது:-
தமிழகத்தில் தங்கள் ஆட்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களையும் அரவணைத்து மக்கள் நலனுக்கான ஆட்சி என்ற குறிக்கோளை கடமையாக கொண்டுள்ள தங்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பூரண மதுவிலக்கு கொள்கையை ஆதரிக்கும் தி.மு.க., தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி லட்சக்கணக்கான பெண்கள், இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும். திறமைமிக்க நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தி மதுவிலக்கால் ஏற்படும் நிதி இழப்பை சரி செய்வது மிகவும் எளிதான காரியம். எனவே, தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அனைத்து மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.