கர்நாடகத்தில் புதிதாக 4 ஆயிரம் டாக்டர்கள் நியமனம் - மந்திரி சுதாகர்
கர்நாடகத்தில் புதிதாக 4 ஆயிரம் டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-
புதிதாக 4 ஆயிரம் டாக்டர்கள்
கர்நாடகத்தில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்தவர்கள் கண்டிப்பாக அரசு ஆஸ்பத்திரியில் ஒரு ஆண்டு பணியாற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவின்பேரில் சமீபத்தில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த 1,750 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர மருத்துவ கல்வித்துறை சார்பாக 2 ஆயிரத்து 53 டாக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக மாநிலம் முழுவதும் புதிதாக 4 ஆயிரம் டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனா பாதிப்பு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 4 ஆயிரம் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது மருத்துவத்துறைக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். கர்நாடக வரலாற்றிலேயே 4 ஆயிரம் டாக்டர்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அந்த டாக்டர்கள் பணியை தொடங்கி உள்ளனர்.
அவசரகதியில் முடிவு எடுக்காது
மாநிலத்தில் 95 சதவீதம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு சதவீதம் 2.62 ஆக உள்ளது. நாட்டிலேயே மராட்டியம், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் தான் 3 கோடியே 36 லட்சத்து 73 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா 2-வது அலையில் 11 மாவட்டங்களில் உயிர் பலி இல்லை. இதன்மூலம் கர்நாடகத்தில் கொரோனா உயிர் இழப்பும் குறைவாக உள்ளது.
மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதில் அரசு அவசரகதியில் முடிவு எடுக்காது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தேதி அறிவித்திருப்பது குறித்து பற்றி எனக்கு தகவல் வரவில்லை. மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தில் அரசு எவ்வளவு கவனம் செலுத்துகிறதோ, அதுபோல், அவர்களது உடல் நலத்திலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை முறையான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.