கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1½ மாதங்களுக்கு பிறகு பஸ்கள் ஓடின பொதுமக்கள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1½ மாதங்களுக்கு பிறகு பஸ்கள் ஓடின பொதுமக்கள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1½ மாதங்களுக்கு பிறகு பஸ்கள் ஓடியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பஸ் போக்குவரத்து
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை கடந்த மே மாத தொடக்கத்தில் உச்சத்தில் இருந்தது. இதன் காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. இதனால் கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு இடையே 50 சதவீத பயணிகளுடன் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 120 டவுன் பஸ்கள், 200 புறநகர் பஸ்கள் என மொத்தம் 320 பஸ்கள் நேற்று கிருஷ்ணகிரி, ஓசூர் உள்பட மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களுக்கு வந்தன. அங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர், சென்னை, தர்மபுரி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு நகரங்களுக்கு 50 சதவீத பஸ்களும் இயக்கப்பட்டன.
50 சதவீத பயணிகள்
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஊத்தங்கரை, அஞ்செட்டி, கெலமங்கலம் உள்பட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் முக கவசம் அணிந்தும், இடைவெளியை கடைபிடித்தும் பயணிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பயணிகள் வருகையை பொறுத்து பஸ்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 1½ மாதத்திற்கு பிறகு நேற்று அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே போல மாவட்டத்தில் நேற்று ஜவுளி, நகைக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
ஓசூர்
ஓசூரில் பஸ் போக்குவரத்தும் தொடங்கியதால், பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, வேலூர், திருவண்ணாமலை தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற நகரங்களுக்கு அரசு போக்குவரத்து மற்றும் தொலைதூர பஸ்களும், டவுன் பஸ்களும் இயக்கப்பட்டன.
ஆனாலும், இந்த பஸ்களில் மிக குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் செய்தனர். இதனால், பஸ் நிலையம் கூட்டமின்றி காணப்பட்டது. 50 நாட்களுக்கு பிறகு, பஸ்கள் போக்குவரத்து தொடங்கி, கடைகள் முழு அளவில் திறக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடைபெற்று ஓசூர், சூளகிரி பகுதிகளில் இயல்புநிலை திரும்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.