திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் ஓவியங்களை வரைந்து நூதன போராட்டம்

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் ஓவியங்களை வரைந்து நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2021-06-28 20:07 GMT
திருச்சி
திருச்சி
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்காளதேசம், பல்கேரியா, ருவாண்டா, கென்யா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய 117 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மீதான குற்றத்துக்கு தண்டனை காலம் முடிந்தாலும் அவரவர் சொந்த நாட்டுக்கு அனுப்பும் வரை முகாமிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். 
இந்தநிலையில் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் முகாமிலிருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 9-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று 20-வது நாளாக அவர்களுடைய போராட்டம் நீடித்தது. 
அப்போது சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் படும் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில், `அப்பா' என்ற தலைப்பில் ஓவியங்களை வரைந்தும், வாசகங்களை எழுதியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த அச்சத்தில் இருக்கும் தங்களது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தநிலையில் அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக கமிஷனர் ஜெசிந்தாமாலாசரஸ் நேற்று மாலை முகாமுக்கு சென்று அங்கு போராட்டம் நடத்தி வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களுடைய கோரிக்கை குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அப்போது கலெக்டர் சிவராசு, துணை கமிஷனர் சக்திவேல், தனித்துணை ஆட்சியர் ஜமுனாராணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்