விவசாயிகள் சார்பில் முற்றுகைப்போராட்டம்

விவசாயிகள் சார்பில் முற்றுகைப்போராட்டம்

Update: 2021-06-28 19:15 GMT
பொங்கலூர்:
பொங்கலூர் அருகே வங்கியில் பணம் எடுக்க முடியாததால் சிகிச்சை பெறமுடியாமல் உயிரிழந்த விவசாயிக்கு இழப்பீடு கேட்டு வங்கி முன்பு விவசாயிகள் சார்பில் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது.
விவசாயி சாவு
பொங்கலூர் அருகே உள்ள மேற்கு குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.75 ஆயிரம் பயிர்கடன் பெற்றுள்ளார். இந்தநிலையில் அவர் சில மாதங்களிலேயே இறந்துவிட்டார். அதே வங்கியில் அவரது மகன் கனகராஜ் (வயது 53) கணக்கு வைத்திருந்தார். அதில் ரூ.2½ லட்சம் இருந்தது. அதில் ரூ.1 லட்சம் தனது சிகிச்சைக்காக எடுத்துள்ளார். 
மேல் சிகிச்சைக்காக மீதி தொகையை எடுத்துச் சென்றபோது வங்கி தரப்பில் தந்தையின் கடனை கட்டி விட்டு பணத்தை எடுக்குமாறு கூறியுள்ளனர். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது சிகிச்சைக்காக அவரை கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது தகவல் அறிந்து விவசாய சங்க பிரதிநிதிகள் வங்கி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பணம் எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் திடீரென கனகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 முற்றுகை போராட்டம்
 இதனால் ஆத்திரமடைந்த விவசாய சங்க பிரதிநிதிகள் வங்கியில் தனது கணக்கில் இருந்த பணத்தை சிகிச்சைக்காக எடுக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த கனகராஜூக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவேண்டும், அதற்கு காரணமான வங்கி மேலாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 
இது குறித்து பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் நேற்று கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். 
கலெக்டரிடம் முறையீடு
அப்போது அவர்களுடன் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதன் முடிவில் இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் அங்கிருந்து மாவட்ட கலெக்டரை சந்திக்க புறப்பட்டுச் சென்றனர்.
அமைச்சரிடம் மனு
பல்லடம் அருகே உள்ள கேத்தனூர் பாரத ஸ்டேட்  வங்கியில் தந்தை பெற்ற கடனுக்காக கனகராஜ் என்ற விவசாயியின் சேமிப்பு கணக்கு முடக்கப்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் கனகராஜ் இறந்து போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பல்லடம் வந்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை இறந்த விவசாயி  கனகராஜின்  சகோதரர் நாராயணசாமி, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி, திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து இறந்துபோன விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி மனு அளித்தனர்.
அப்போது திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், பல்லடம் ஒன்றியகுழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்