திருவண்ணாமலை மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கியது
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொரோனா தொற்று
கொரோனா 2-வது அலையின் தாக்கத்தினால் கடந்த மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது தொற்று குறைய தொடங்கி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது.
மாவட்டத்தில் கொரோனா ‘ஜூரோ’ என்ற நிலைக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் வருகிற 5-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் 4 மாவட்டங்களுடன் கூடுதலாக, தொற்று குறைவாக உள்ள 23 மாவட்டங்களையும் சேர்த்து நேற்று முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பயணிகள் மகிழ்ச்சி
அதைத் தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கியது. காலை 6 மணி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் மாவட்டங்களுக்கு உள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ்கள் இயக்கப்பட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த பயணிகள் மிகவும் ஆர்வமாக வந்து பஸ்களில் பயணம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னை, ஒசூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
பஸ்களில் பயணம் செய்ய வரும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்ததால் வெளியூருக்கும், வேலைக்கும் செல்ல முடியாமல் தவித்து வந்த மக்கள் நேற்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியதை அடுத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அரசு வழிகாட்டுதல் படி பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகின்றது.
பயணிகள் வருகைக்கு ஏற்ப தொடர்ந்து பஸ்கள் இயக்கப்படும். இரவு பயணத்திற்கும் பஸ்கள் இயக்கப்படும் என்றனர்.
ஆனால் நேற்று திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ்கள் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.