பழனி-கொடைக்கானல் இடையே ரோப்கார் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்
பழனி-கொடைக்கானல் இடையே ரோப்கார் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.
பழனி:
கொரோனா நிவாரணம்
பழனி முருகன் கோவில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.4 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி குடமுழுக்கு அரங்கில் நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) நடராஜன், ஆர்.டி.ஓ. ஆனந்தி, உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலுச்சாமி எம்.பி., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்களுக்கு நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. பேசியதாவது:-
பழனி சட்டமன்ற தொகுதியில் கோவில் நகரமான பழனி, சுற்றுலா தலமான கொடைக்கானல் ஆகியவை அமைந்துள்ளன.
எனவே 2 நகரங்கள் வளர்ச்சிக்கு தேவையான சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை நிறைவேற்றப்படும். பழனி நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள கோடைகால நீர்த்தேக்கத்தை விரிவுப்படுத்தி நீர் இருப்பை அதிகரிக்க சிறப்பு திட்டம் கொண்டு வரப்பட்டு அதன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. விரைவில் பழனி நகரில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும்.
ரோப்கார் திட்டம்
அதேபோல் பழனி, தொப்பம்பட்டி ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களின் குடிநீர் வசதிக்காக ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.
பழனி-கொடைக்கானல் இடையே ரோப்கார் திட்டம், கொடைக்கானலில் ஹெலிபேட் அமைக்கும் திட்டம் ஆகியவை விரைவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்கள் குறித்து சமீபத்தில் நடந்த சட்டமன்ற திட்டக்குழு கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளேன். எனவே பழனி, கொடைக்கானல் பகுதிக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.