நாகையில் டீக்கடை பாத்திரக்கடைகள் திறப்பு

ஊரடங்கில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டதையொட்டி நாகையில் டீக்கடை, பாத்திரக்கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

Update: 2021-06-28 15:09 GMT
நாகப்பட்டினம்:
ஊரடங்கில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டதையொட்டி நாகையில் டீக்கடை, பாத்திரக்கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பொருட்களை வாங்கி சென்றனர். 
ஊரடங்கில் கூடுதல் தளர்வு 
தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் குறைந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் மே 24-ந்தேதி முதல் ஒவ்வொரு வாரமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இ்தையடுத்து ஊரடங்கு உத்தரவில் மேலும் பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
இதில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தளர்வில் நாகையில் டீக்கடை, பாத்திரக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளை  திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
டீக்கடை, பாத்திரக்கடைகள் திறப்பு
அதன்படி நாகையில் நேற்று ஊரடங்கு தளர்வு காரணமாக டீக்கடைகள், பாத்திரக்கடைகள், செல்போன் கடைகள், எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டன. இதில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் கடைகளுக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர்.
இதனால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக வெறிச்சோடி கிடந்த நாகை நகர் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 
மக்கள் நடமாட்டம் அதிகம்
குறிப்பாக நாகை கடைத்தெரு, பப்ளிக் ஆபீஸ் ரோடு, நீலா வீதிகள், வெளிப்பாளையம், புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. மேலும் நீண்ட நாட்களுக்கு பின் கடைகள் திறந்ததால் அதன் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்