இன்று முதல் கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி: வீரராகவப் பெருமாள் கோவிலில் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களில் கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கு இன்று முதல் அனுமதிக்கப்பட உள்ள நிலையில், வீரராகவப் பெருமாள் கோவிலில் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.

Update: 2021-06-28 05:27 GMT
திருவள்ளூர், 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி முதல் கோவில்களில் பூஜைகள் மட்டும் நடத்திட அனுமதி அளித்து பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்த காரணத்தால் அனைத்து கோவில்களையும் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று பக்தர்கள் கூட்டம் வரக்கூடும் என்பதால் திருவள்ளூரில் உள்ள பிரசித்திப்பெற்ற பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று நடைபெற்றது.

அப்போது கோவில் ஊழியர்கள் வளாகத்தை முழுவதுமாக சுத்தம் செய்து தூய்மை செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில், திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு வந்து தூய்மை செய்யும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பக்தர்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சானிடைசர் மூலம் கைகளை கழுவ அறிவுறுத்த வேண்டும், கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.80 நாட்களுக்குப் பிறகு கோவில் திறக்கப்பட உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வரக்கூடும் என்பதால் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் அறிவுறுத்தினார். மேலும் கோவிலில் பணிபுரியும் பூசாரிகள், பட்டாச்சாரியார்கள், ஊழியர்களுக்கு கோவில் வளாகத்திலேயே சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யும் பணியும் நடைபெற்றது.

இப் பணியையும் தாசில்தார் செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தடுப்பூசி போடாத கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஊழியர்களுக்கும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்