சென்னிமலை அருகே கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மாத்திரை கொடுத்த சம்பவத்தில் மேலும் 2 பெண்கள் பரிதாப சாவு பக்கத்து வீட்டுக்காரர்-கல்லூரி மாணவர் கைது; பரபரப்பு தகவல்கள்
சென்னிமலை அருகே கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மாத்திரையை கொடுத்த வழக்கில் மேலும் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னிமலை
சென்னிமலை அருகே கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மாத்திரையை கொடுத்த வழக்கில் மேலும் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொரோனா பரிசோதனை...
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பண கவுண்டர் (வயது 75). இவருடைய மனைவி மல்லிகா (58). இவர்களுடைய மகள் தீபா (30). தீபாவின் கணவர் பிரபு.
தீபாவும், பிரபுவும், கருப்பண கவுண்டர் வீட்டிலேயே வசித்து வந்தனர். பிரபுவுக்கு லோகித் என்ற மகனும், லட்சிதா என்ற மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை சென்னிமலைக்கு பிரபு சென்றுவிட்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் கருப்பண கவுண்டர் வீட்டுக்கு சென்று உள்ளார். பின்னர் அவர் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி கருப்பண கவுண்டர், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குப்பம்மாள் (65) ஆகிய 4 பேருக்கும் மாத்திரை கொடுத்துள்ளார். அவர்களும் அந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டனர். ஆனால் அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) என்பவர் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்து விட்டதால் தனக்கு மாத்திரை தேவையில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர் மாத்திரையை சாப்பிடவில்லை.
மாத்திரை
பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த மர்ம நபரை கல்யாணசுந்தரம் மெயின்ரோடு வரை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்று விட்டார். இதற்கிடையே மாத்திரை சாப்பிட்ட தீபாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், உடனே அவர் இதுபற்றி தனது கணவர் பிரபுவுக்கு தெரிவித்து உள்ளார். உடனே பிரபு வீட்டுக்கு காரில் விரைந்து சென்று மயங்கி விழுந்த கிடந்த கருப்பண கவுண்டர், மல்லிகா, தீபா, குப்பம்மாள் ஆகியோரை மீட்டு சென்னிமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் மல்லிகா பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து குப்பம்மாள், சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், கருப்பண கவுண்டர், தீபா ஆகியோர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் 2 பெண்கள் சாவு
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குப்பம்மாள், கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தீபா இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 2 பெண்கள் இறந்ததால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
இந்தநிலையில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி சென்னிமலை அருகே உள்ள கருப்பண கவுண்டர் தோட்டத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உடனிருந்தார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி, தனிப்பிரிவு ஏட்டு கலைமணி உள்ளிட்டோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
ரூ.15 லட்சம் கடன்
விசாரணையில், கருப்பண கவுண்டர் வீட்டில் அனைவரும் மாத்திரை சாப்பிட்ட போது மாத்திரையை சாப்பிடாமல் இருந்த கல்யாணசுந்தரத்தின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
முதலில் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு கல்யாணசுந்தரம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். பின்னர் தீவிரமாக விசாரித்தபோது கல்யாண சுந்தரம் கல்லூரி மாணவர் ஒருவர் உதவியோடு இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வாணி பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். சென்னிமலை அருகே அம்மாபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். கல்யாணசுந்தரம் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். மேலும் கருப்பண கவுண்டருடன் சேர்ந்து கல்யாணசுந்தரம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கருப்பண கவுண்டர் வீடு அருகே தோட்டம் ஒன்றை குத்தகைக்கு பிடித்து விவசாயமும் செய்து வந்துள்ளார். அப்போது கருப்பண கவுண்டரிடம் கல்யாணசுந்தரம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. கடனை செலுத்த முடியாததால் வட்டியுடன் சேர்த்து ரூ.15 லட்சத்துக்கு மேல் கடன் ஆனதாக கூறப்படுகிறது.
கல்லூரி மாணவர்
கல்யாணசுந்தரத்திடம் கருப்பணகவுண்டர் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். வாங்கிய கடனை திரும்ப கொடுப்பதற்கு மனமில்லாத கல்யாணசுந்தரம் கருப்பணகவுண்டர் குடும்பத்தையே தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக கல்யாணசுந்தரம் பால் ஊற்றிய இடத்தில் பழக்கமான சென்னிமலை அருகே எம்.பி.என் காலனியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவரை உதவிக்கு அழைத்துள்ளார். ஈரோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் அந்த மாணவர் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
மாணவரின் குடும்பத்தாரை கல்யாணசுந்தரம் சந்தித்து முருங்கத்தொழுவு ஊராட்சியில் கொரோனா பரிசோதனை செய்யும் வேலையை உங்கள் மகனுக்கு வாங்கி தருகிறேன். அதற்கான என்னுடன் அவரை அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு மாணவரின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
2 பேர் கைது
அதைத்தொடர்ந்து கல்யாணசுந்தரம் மாணவரிடம் எப்படி நடிக்கவேண்டும் என்று கூறி பூச்சிக்கொல்லி மாத்திரையை கொடுத்து அனுப்பியுள்ளார். அதன்படி மாணவரும் கருப்பணகவுண்டரின் குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளார். நல்லவர்போல் நடித்த கல்யாணசுந்தரம் காரியம் முடிந்ததும் அவரே மாணவரை அழைத்து சென்று விட்டுள்ளார் என்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து கல்யாணசுந்தரம் மற்றும் கல்லூரி மாணவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் மீதமுள்ள பூச்சிக்கொல்லி மாத்திரைகளையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
ரூ.15 லட்சம் கடனை ஏமாற்றுவதற்காக பக்கத்து வீட்டுக்காரரே பூச்சிக்கொல்லி மாத்திரைகளை கொடுத்து 3 பெண்களை கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.