சிறுத்தைப்புலி நடமாட்டம் இல்லை
கந்தம்பட்டி கரும்பு தோட்டத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இல்லை என்று வன அலுவலர் தெரிவித்து உள்ளார். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
சேலம்,
கந்தம்பட்டி கரும்பு தோட்டத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இல்லை என்று வன அலுவலர் தெரிவித்து உள்ளார். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
பொதுமக்கள் பீதி
சேலம் கந்தம்பட்டி அருகே உள்ள கோனேரிக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் வனிதா (வயது 32), பூங்கொடி (29). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள கரும்பு தோட்டத்துக்கு புல் அறுக்க சென்றனர்.
அப்போது அங்குள்ள ஒருவரது கரும்பு தோட்டத்தில் வால் நீளமாக ஒரு வனவிலங்கு இருப்பதாகவும், அது சிறுத்தைப்புலியாக இருக்கலாம் என்று நினைத்து அவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தனர்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் கரும்பு தோட்ட பகுதியில் சிறுத்தைப்புலி உள்ளது என்று கூறினர். இதனால் கோனேரிக்கரை பகுதியில் பொதுமக்களிடையே சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து பீதி ஏற்பட்டது.
தீவிர தேடுதல் வேட்டை
இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலையில் இருந்து இரவு வரை அந்த பகுதியில் முகாமிட்டு சிறுத்தைப்புலி உள்ளதா? என்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
தொடர்ந்து நேற்று 2-வது நாளாக தீவிரமாக தோட்டப்பகுதியில் வனத்துறையினர் தேடினர். ஆனால் சிறுத்தைப்புலி இல்லை. அதே போன்று ‘டிரோன்’ கேமரா மூலமும் ஆய்வு செய்தனர். அதிலும் கரும்பு தோட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்ததாக தெரியவில்லை.
சிறுத்தைப்புலி நடமாட்டம் இல்லை
இதுகுறித்து சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சின்னத்தம்பியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கரும்பு தோட்டத்திற்குள் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறியதன் பேரில் 2 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளோம். இதில் 40 பேர் கொண்ட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
காட்டு பகுதியில் மனிதர்கள், விலங்குகள் நடமாட்டம் இருப்பதை துல்லியமாக படம் எடுத்து அனுப்பும் பிரத்தியேக கேமரா மூலமும் படம் எடுக்கப்பட்டது. ஆனால் சிறுத்தைப்புலி நடமாட்டம் எதுவும் பதிவாகவில்லை.
விலங்கின் கால் தடம்
பொதுமக்கள் கூறிய சம்பந்தப்பட்ட இடத்தில் ஒரு விலங்கின் கால்தடம் பதிவாகி உள்ளது. அந்த கால் தடத்தின் மாதிரி எடுத்து வனத்துறையினரும், கால்நடைத்துறையினரும் ஆய்வு நடத்தினர். அந்த கால்தடம் ஒரு நாயின் கால் தடம். எனவே கரும்பு தோட்ட பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இல்லை. மேலும் இது குறித்து அங்குள்ள பொதுமக்களிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். அங்குள்ள குட்செட் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம்
அந்த பகுதியிலும் சிறுத்தைப்புலி நடமாட்டம் இல்லை. மேலும் சிறுத்தைப்புலியை பார்த்ததாக கூறிய பெண்களிடம் விசாரித்தபோது அவர்கள் உறுதியாக சிறுத்தைப்புலியை தான் பார்த்தோம் என்று கூற முடியவில்லை என தெரிவித்தனர்.
நிம்மதி அடைந்து உள்ளனர்
அவர்கள் பார்த்தது நாயோ அல்லது பெரிய அளவிலான பூனையாக கூட இருக்கலாம். 2 நாள் நடந்த தேடுதல் வேட்டையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. இருப்பினும் வனத்துறை சார்பில் தனி குழுவினர் இந்த பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கரும்பு தோட்ட பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இல்லை என்பது தெரியவந்ததால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.