கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து இன்று முடிவு; மந்திரி சுரேஷ்குமார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்
பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் இன்று (திங்கட்கிழமை) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க உள்ளார். 10-ம் வகுப்பு தேர்வுக்கான வழிகாட்டுதலும் வெளியிடப்பட இருக்கிறது.
பெங்களூரு:
பள்ளிகளை திறக்க வேண்டும்
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கடந்த மே மாதம் உச்சத்தை தொட்ட பிறகு படிப்படியாக குறைந்து தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. மாநிலத்தில் தினசரி கெரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தினசரி கொரோனாவால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் 100 ஆக சரிந்துள்ளது. கர்நாடகத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கு அதிகமாகவே உள்ளது. அதனால் உயிரிழப்பு 100-க்கு கீழ் குறையாமல் உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து பள்ளிகளை திறக்கலாம் என்று நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. பெரும்பாலான கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர், பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
அதனால் பள்ளிகளில் தினசரி நேரடி வகுப்புகளை திறப்பதை காட்டிலும் கடந்த 2020-ம் ஆண்டை போல் வித்யாகம வகுப்புகளை நடத்துவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதுகுறித்து 28-ந் தேதி (அதாவது இன்று) நடைபெறும் அதிகாரிகளுடனான கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
அதன்படி பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தலைமையில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் காணொலி மூலம் நடக்கிறது. இதில் 10-ம் வகுப்பு தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டுதலை இறுதி செய்வது, பள்ளிகளில் வித்யாகம வகுப்புகளை நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டால் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.
பாட வகுப்புகள்
கர்நாடகத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை ஏற்கனவே அதாவது கடந்த 14-ந் தேதி தொடங்கிவிட்டன. அதிகபட்சமாக தினசரி 3 பாட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பகல் 12 மணி வரை பாடங்கள் எடுக்கப்படுகின்றன. அன்றாடம் நடத்தப்படும் பாடங்களின் அடிப்படையில் வீட்டு பாட வேலை 'வாட்ஸ்அப்' மூலம் குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதை குழந்தைகள் அன்றாட வீட்டு பாட வேலைகளை முடித்து விடுகின்றன. தனியார் பள்ளிகள் இதுவரை கல்வி கட்டணம் செலுத்தும்படி எந்த தகவலையும் பெற்றோருக்கு அனுப்பவில்லை. அடுத்த சில நாட்களில் கல்வி கட்டணம் குறித்த தகவல் பெற்றோருக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகத்தில் கடந்த கல்வி ஆண்டில் கல்வி கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்பட்டது.
ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம்
இந்த ஆண்டு கட்டண குறைப்பு குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. அதனால் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்தும்படி பெற்றோருக்கு உத்தரவிடும் என்று கூறப்படுகிறது. அதனால் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர், கடந்த ஆண்டை போல் நடப்பு கல்வி ஆண்டிலும் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கல்வி கட்டணம் தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற்றது. கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கலாம் என்று கர்நாடக அரசு ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதற்கு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அடுத்த சில நாட்களில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.