33 பேரின் மனு மீது உடனடி தீர்வு

திருப்புவனம் தாலுகா அலுவலகம் சார்பில் நடந்த ஜமாபந்தியில் 33 பேரின் மனுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2021-06-27 19:35 GMT
திருப்புவனம்,

சிவகங்கை மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி லதா தலைமையில் கடந்த 11 நாட்களாக ஜமாபந்தி நடைபெற்றது. இதில் திருப்புவனம் தாலுகாவில் உள்ள திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கொந்தகை உள் வட்டங்களை சேர்ந்த 43 வருவாய் கிராமங்களில் உள்ள கிராம கணக்குகளான பயிர் சாகுபடி, பட்டா மாறுதல், நிலவரி உள்ளிட்டவை கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. இந்த பணியில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக தணிக்கையாளர்களான அலுவலக மேலாளர் (குற்றவியல்) சுமதி என்ற சுதந்திரா, துணை தாசில்தார் சசிக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர்.
முகாமில் இணையதளம் வாயிலாக பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட 86 மனுக்களில் 11 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், 22 பேருக்கு முதியோர்,விதவை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை என 33 பேருக்கு உத்தரவினை மாவட்ட வருவாய் அதிகாரி லதா வழங்கினார். முகாமில் திருப்புவனம் தாசில்தார் ரத்தினவேல் பாண்டியன், தனி தாசில்தார் உமாமகேஸ்வரி, மண்டல துணை தாசில்தார் தர்மராஜ் மேலும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கொந்தகை வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்