ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் மது பாட்டிலால் குத்திக்கொலை
பெரம்பலூர் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரை மது பாட்டிலால் குத்திக்கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:
ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வயர்மேனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு பெரியம்மாள் என்ற மனைவியும், கார்த்தி, தேவராஜ் ஆகிய 2 மகன்களும் இருந்தனர். கருப்பையா தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் காட்டுக்கொட்டகையில் வசித்து வந்தார்.
இதில் தேவராஜ் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். கார்த்திக்கு பெரியம்மாளின் அண்ணனான சோமண்டாபுதூரை சேர்ந்த பழனிமுத்துவின் மகள் ரம்யாவுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியின் ஒரே மகள் சந்தியா (15) கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
தகராறு
இதனால் கார்த்தி சற்று மனநிலை பாதிக்கப்பட்டதால் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். ரம்யா கோனேரிப்பாளையம் நடுத்தெருவில் உள்ள வீட்டில் தனது தாய் சரோஜாவுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கருப்பையா வீட்டிற்கு ரம்யாவின் அண்ணனும், விவசாயியுமான பெரியசாமி (32) சென்றுள்ளார். அப்போது பெரியம்மாளும், கார்த்திக்கும் தூங்கி கொண்டிருந்தனர். கருப்பையாவும், பெரியசாமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது.
குத்திக்கொலை
இதில் ஆத்திரமடைந்த பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து கருப்பையாவை குத்த முயன்றார். இதனை கருப்பையா கையால் தடுத்துள்ளார். இருப்பினும் பெரியசாமி, கருப்பையாவின் கழுத்து பகுதியில் மது பாட்டிலால் குத்தி விட்டு தப்பியோடினார். இதில் உயிருக்கு போராடிய கருப்பையா சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு எழுந்து வந்த பெரியம்மாள் கணவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பையாவின் உடலை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து கருப்பையாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி இருந்த பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர். பெரியசாமியிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறியதாவது:-
கருப்பையாவும், பெரியசாமியின் தந்தை பழனிமுத்துவும் சேர்ந்து ஆடுகள் வளர்த்து வந்துள்ளனர். அந்த ஆடுகளை பழனிமுத்து கடந்த ஏப்ரல் மாதம் விற்று விட்டார். ஆடுகள் விற்ற பணத்தை பழனிமுத்துவிடம் கருப்பையா கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பழனிமுத்துவை கருப்பையா தாக்கியுள்ளார். இது தொடர்பாக பழனிமுத்து கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் கருப்பையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாக்குவாதம்
மேலும் கருப்பையா, தனக்கு சொந்தமான நிலத்தை விற்க ஒப்பந்தம் செய்து முன் பணம் பெற்றுள்ளார். இதனை அறிந்த பழனிமுத்து, கருப்பையாவிடம் நிலத்தை விற்கக்கூடாது என்றும், தனது மகள் ரம்யாவிற்கு வாழ்வாதாரம் எதுவுமில்லாததால், நிலத்தை தனது மகள் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும், என்றும் கூறியுள்ளார். இதற்கு கருப்பையா மறுத்துள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்ட பெரியசாமி நேற்று முன்தினம் நள்ளிரவு கருப்பையா வீட்டிற்கு சென்று, நிலத்தை தனது தங்கை பெயருக்கு எழுதி வைக்குமாறு கூறி, கருப்பையாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து ஏற்பட்ட தகராறில் கருப்பையாவை பெரியசாமி மது பாட்டிலால் குத்தி கொலை செய்துள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து பெரியசாமி அரியலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரியசாமிக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.