சமயபுரத்தில் மொபட் மீது லாரி மோதி தாய்-மகன் பலி; துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்

தந்தை இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய போது சமயபுரத்தில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-06-27 18:52 GMT
சமயபுரம்,
தந்தை இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய போது சமயபுரத்தில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துக்க நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம், சமயபுரம் மருதூர் பிரிவு ரோடு பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவர் மனைவி சரோஜா (வயது 35). பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் அருகே உள்ள நாடார் மங்கலத்தில் தனது தந்தை இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மகன் தனபாலை (9) அழைத்து கொண்டு கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்று இருந்தார்.

 துக்க நிகழ்ச்சி முடிந்த பின்பு ஊருக்கு செல்ல திட்டமிட்ட சரோஜா, தனபாலை அழைத்துக் கொண்டு தனது அண்ணன் ராமசாமியுடன் (48) மொபட்டில் நேற்று சமயபுரம் புறப்பட்டார். இவர்களுடன் ராமசாமியின் மகன் விஷ்ணுவும்(15) வந்தார்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு மருந்து ஏற்றிச்சென்ற லாரி, மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

தாய்-மகன் பலி

இந்த விபத்தில் தனபால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். சரோஜா, ராமசாமி, அவரது மகன் விஷ்ணு ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட அவ்வழியே சென்றவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சரோஜா மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் சிவக்குமாரை (39) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தந்தை இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு திரும்பிய தாய்-மகன் இறந்த சம்பவம் அந்த குடும்பத்தில் மட்டுமல்லாது உறவினர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்