கரூரில் வீட்டில் இருந்து மாயமான பஸ் கூண்டு கட்டும் தொழிலாளி பிணமாக மீட்பு
கரூரில் வீட்டில் இருந்து மாயமான பஸ் கூண்டு கட்டும் தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார். மேலும் அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்
கட்டிடத்தில் துர்நாற்றம்
கரூர் வடக்கு முருகநாதபுரத்தில் மின்சாதன கருவிகள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வரும் ஒரு கட்டிடத்தின் உள்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது அந்த கட்டிடத்தின் லிப்ட் இயங்கும் அடிப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
மேலும், அந்த கட்டிடத்தின் வெளிப்பகுதியில் மொபட் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த ஆணின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பஸ் கூண்டு கட்டும் தொழிலாளி
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அங்கு இறந்து கிடந்தவர் தாந்தோணிமலை மில்கேட் பகுதியை சேர்ந்த அருள்ராஜ் (வயது 52) என்பதும், அவர் பஸ் கூண்டு கட்டும் நிறுவனத்தில் கார்பென்டராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று மாயமாகி இருந்ததும் தெரியவந்தது. மேலும், அருள்ராஜ் எதற்காக இங்கு வந்தார்? தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அடித்துக் கொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.