காலர் ஐ டி பொருத்துவதற்காக பாகுபலி காட்டு யானையை பிடிக்க தீவிர கண்காணிப்பு
காலர் ஐ.டி. பொருத்துவதற்காக பாகுபலி காட்டு யானையை பிடிக்க தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று தப்பியதால் வனத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேட்டுப்பாளையம்
காலர் ஐ.டி. பொருத்துவதற்காக பாகுபலி காட்டு யானையை பிடிக்க தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று தப்பியதால் வனத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பாகுபலி காட்டு யானை
மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதியில் தனியாக ஒரு காட்டு யானை சுற்றி வருகிறது. அந்த யானை விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் அந்த யானை பொது மக்கள் யாரையும் தாக்குவது இல்லை.
எனவே அதை பிடித்து அதன் நடமாட்டத்தை கண்டறிய காலர் ஐ.டி. பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் ஆகியவை மேட்டுப் பாளையம் கொண்டு வரப்பட்டது.
கண்காணிப்பு
இந்த நிலையில் மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ், உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், வனச்சரக அதிகாரி பழனிராஜா, வன கால்நடை டாக்டர்கள் சுகுமார், ராஜேஷ்குமார், பிரகாஷ், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த யானை வனப்பகுதியை விட்டு வெளியே வரவில்லை. சிறுமுகை வனப்பகுதியில் பாகுபலி யானை நிற்பது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர் சுகுமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மயக்க ஊசி செலுத்த வனப்பகுதிக்குள் சென்றனர்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பியது
அப்போது திடீரென்று அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று தப்பி ஓடியது. பின்னர் அந்த யானை வெளியே வரவில்லை. இதை யடுத்து வனத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இது குறித்து மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் கூறும்போது, 3 நாட்களாக பாகுபலி யானையை கண்காணித்து வருகிறோம். ஆனால் அதற்கு மயக்க மருந்து செலுத்த முடியவில்லை.
அந்த யானை நல்ல திறனுடன் இருப்பதால் நாங்கள் வனப்பகுதிக்குள் செல்லும்போது நுகர்வு தன்மை மூலம் கண்டறிந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது.
இருந்தபோதிலும் அந்த யானையை கும்கிகள் மூலம் சமவெளி பகுதிக்கு கொண்டு வந்து மயக்க மருந்து செலுத்தி காலர் ஐ.டி. பொருத்தப்படும் என்றார்.