கொலை வழக்கில் 5 பேர் கைது. பழிக்குப்பழியாக கொன்றதாக வாலிபர் வாக்குமூலம்
அரக்கோணம் அருகே நடந்த கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். தந்தையின் கொலைக்கு பழிக்குப்பழியாக கொன்றதாக வாலிபர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
அரக்கோணம்
5 பேர் கைது
அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கத்தை சேர்ந்தவர் கோதண்டன். இவர் கடந்த 25-ந் தேதி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அரக்கோணம் - திருவள்ளூர் ரோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையின் பாழடைந்த குடியிருப்பு பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சென்று அங்கு பதுங்கி இருந்த 5 பேரை கைது செய்தனர்.
பழிக்குப்பழியாக
விசாரணையில் அவர்கள் கொலை செய்யப்பட்ட கோதண்டனின் உறவினர் முனுசாமியின் மகன் மனோஜ் (வயது25), அவரது நண்பர்கள் தணிகைபோளூரை சார்ந்த முகேஷ் குமார் (23), சுனில் (23), அரக்கோணம் ஜோதி நகரை சேர்ந்த 17 வயது வாலிபர், மங்கம்மா பேட்டையை சேர்ந்த சுப்பிரமணி (26) என்பது தெரியவந்தது.
மேலும் மனோஜிடம் விசாரித்த போது தனது தந்தையின் கொலைக்கு பழிக்குப் பழியாக கோதண்டனை கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் இது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.