இரும்பு தடுப்புகள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பலி
அரியலூரில் துக்க நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு திரும்பியபோது இரும்பு தடுப்புகள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
அரியலூர்,
அரியலூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் புண்ணியமூர்த்தி(வயது 40), அபிஷ்நாத்(19). இதில் அபிஷ்நாத் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் தகவல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். உறவினர்களான 2 பேரும் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் அரியலூருக்கு வந்தனர். மாலையில் 2 பேரும் சாத்தமங்கலம் நோக்கி திரும்பி சென்றனர்.
புண்ணியமூர்த்தி மோட்டார் சைக்கிளை ஓட்ட, அபிஷ்நாத் பின்னால் அமர்ந்திருந்தார். புறவழிச்சாலையில் வந்தபோது அம்மாகுளம் பிரிவு சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அபிஷ்நாத் அதே இடத்தில் இறந்தார்.
பலத்த காயமடைந்த புண்ணியமூர்த்தி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.