மணல் கடத்திய 11 மாட்டு வண்டிகள் பறிமுதல்; 7 பேர் கைது
தா.பழூர் பகுதியில் மணல் கடத்திய 11 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராம நிர்வாக அதிகாரி ராஜ்குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கோட்டியால் கிராமத்தை சேர்ந்த ஆனந்த்(வயது 60), ரத்தினசாமி (68), பெரியசாமி (50), வேணாநல்லூர் கிராமத்தை சேர்ந்த மகாராஜன் (41) ஆகியோர் அரசு அனுமதி இல்லாமல் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
அவர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில், இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி, தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் 4 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் காரைக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி பரணிகுமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அருள்மொழி கிராமத்தை சேர்ந்த ஜெயபால் (41), தனவேல் (75), அன்பழகன் (49), செந்தில் (32), ராமலிங்கம் (65), அன்பரசன் (30), காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சங்கர் (42) ஆகியோர் அரசு அனுமதி இல்லாமல் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி, தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 7 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தார். மேலும் 7 பேரையும் கைது செய்தார்.