விருத்தாசலத்தில் அணில்களால் மின்தடை ஏற்பட்டதாக முகநூலில் பதிவிட்ட அமைச்சர்
விருத்தாசலத்தில் அணில்களால் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி முகநூலில் பதிவிட்டுள்ளார்.
விருத்தாசலம்,
தமிழகத்தில் தற்போது பல நகரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் சரியான பராமரிப்பு பணி நடைபெறவில்லை என்றும், மின்கம்பங்கள் உள்ள பகுதிகளில் செடி, கொடிகள் படர்ந்து கிடப்பதால் அதில் அணில்கள் ஓடும்போது 2 மின் கம்பிகளிடையே இணைப்பு ஏற்பட்டு மின்தடை ஏற்படுகிறது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்து இருந்தார்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அணில்களால் மின்தடை ஏற்பட்டது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
மின்சாரம் தாக்கி பலி
விருத்தாசலம் பாலக்கரையில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து கடலூர் சாலை, ஜங்ஷன் சாலை பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. மின்மாற்றி அருகே உள்ள அரச மரத்தில் அணில்கள் கூடுகட்டி வசிக்கின்றன.
நேற்று முன்தினம் மாலையில் மின்மாற்றி அருகே 2 அணில்கள் அங்கும், இங்கும் ஓடி விளையாடியது. இதனால் இருகம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது. மின்சாரம் தாக்கியதில் 2 அணில்களும் இறந்து, மின்கம்பியிலேயே தொங்கின. அப்போது அங்கு வந்த மற்றொரு அணிலும், மின்சாரம் தாக்கி இறந்தது.
முகநூலில் பதிவிட்ட அமைச்சர்
3 அணில்களும் ஒன்றன்பின் ஒன்றாக மின்கம்பியில் சிக்கி, அந்த மின்மாற்றி வெடித்து சிதறி, தீப்பொறிகள் பறந்தன. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து, மின்மாற்றி கம்பத்தில் ஏறி மின்கம்பியில் தொங்கிக்கொண்டிருந்த 3 அணில்களையும் அப்புறப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் மீண்டும் மின்வினியோகம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதை உண்மையாக்கி உள்ளதாக கூறி தி.மு.க.வினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜியும் தனது முகநூல் பக்கத்தில், விருத்தாசலத்தில் அணில்களால் மின்தடை ஏற்பட்டுள்ளதாக கூறி இச்சம்பவத்தை பதிவிட்டுள்ளார்.