தர்மபுரி சி.எஸ்.ஐ. சீயோன் ஆலயம் முன்பு ஆயர், மனைவியுடன் காத்திருப்பு போராட்டம் இருதரப்பினர் திரண்டதால் பரபரப்பு

தர்மபுரி சி.எஸ்.ஐ. சீயோன் ஆலயம் முன்பு புதிதாக நியமிக்கப்பட்ட ஆயர், ஆலயத்துக்குள் அனுமதிக்க கோரி மனைவியுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது இருதரப்பினர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-27 16:39 GMT
தர்மபுரி:

ஆயர் நியமனம்
தர்மபுரி டாக்டர் தர்மலிங்கம் ரோடு, பெரியார் பயணியர் மாளிகை முன்பு சி.எஸ்.ஐ. சீயோன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தற்போது பிரபு சந்திரமோகன் ஆயராக பணியாற்றி வருகிறார். சென்னிமலையில் பணியாற்றி வந்த அன்புராஜ் இடமாற்றம் செய்து தர்மபுரி சி.எஸ்.ஐ. சீயோன் ஆலயத்திற்கு ஆயராக கோவை திருமண்டல சி.எஸ்.ஐ. ஆலயங்களின் பேராயர் திமோத்தி ரவீந்தரால் நியமிக்கப்பட்டார்.
புதிதாக நியமிக்கப்பட்ட ஆயர் அன்புராஜ் அவரது மனைவி கிருபாவதி ஆகியோர் நியமன ஆணையுடன் நேற்று காலை 6 மணிக்கு தர்மபுரி சி.எஸ்.ஐ. சீயோன் ஆலயத்திற்கு வந்தனர். அங்கே ஆலயத்தின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரமாகியும் அவர்கள் உள்ளே நுழைய முயன்றும் கதவு திறக்கப்படவில்லை. 
காத்திருப்பு போராட்டம்
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பு பிரார்த்தனை முடியாத நிலையில் ஆயர் தனது மனைவியுடன் ஆலயம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் 5 மணி நேரம் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆலயத்துக்குள் கிறிஸ்தவர்கள் யாரும் பிரார்த்தனையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கனவே பணியில் உள்ள ஆயர் பிரபு சந்திரமோகன் ஆலயத்துக்குள் இருந்தபடியே இணையம் வழியாக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். இந்த நிலையில் ஏற்கனவே ஆயராக உள்ள பிரபு சந்திரமோகனுக்கு ஆதரவாக சிலரும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆயர் அன்புராஜிக்கு ஆதரவாக சிலரும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆயரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேராயரால் நியமிக்கப்பட்ட என்னை ஏற்கனவே உள்ள ஆயர் பிரபு சந்திரமோகன் ஆலயத்துக்குள் அனுமதிக்காமல் கதவை பூட்டிக்கொண்டு தனது அதிகாரத்தை மீறுகிறார் என்று போலீசாரிடம் ஆயர் அன்புராஜ் புகார் தெரிவித்தார்.
இதேபோன்று ஆலயத்தின் பேரவை குழு உறுப்பினர் பாக்யராஜ் மற்றும் உறுப்பினர்கள் போலீசாரிடம் கூறுகையில், தற்போதுள்ள ஆயர் பிரபு சந்திரமோகன் இன்னும் 2 ஆண்டுகாலம் பணியில் இருக்கலாம். அதற்குள் இந்த ஆலயத்திலுள்ள ஒருசில நிர்வாகிகளின் தூண்டுதலின் பேரில் புதிய ஆயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆலயத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலானோர் பேராயர் திமோத்தி ரவீந்தரிடம் முறையிட்டு உள்ளோம். 
அறிவுறுத்தல்
ஊரடங்கு நடைமுறைகள் முடிவுக்கு வந்த பின்னர் ஆயர் நியமனம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் இந்த ஆலயத்தின் மாண்பை கெடுக்கும் வகையில் செயல்படுகிறார் என்று அவர்கள் கூறினார். இரு தரப்பினரின் விளக்கங்களை கேட்டு அறிந்த போலீசார் பேராயரின் முடிவுக்கு பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அதுவரை ஆலயம் முன்பு யாரும் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆயர் மற்றும் இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்