தூத்துக்குடியில் பெண் உள்பட 3பேர் மீது திராவகம் வீச்சு கணவருக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடியில் பெண் உள்பட 3 பேர் மீது திராவகம் வீசிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி;
தூத்துக்குடியில் பெண் உள்பட 3 பேர் மீது திராவகம் வீசிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஒர்க்ஷாப்
தூத்துக்குடி அசோக்நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மாலா (வயது 49). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
மாலாவுக்கும், தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்த சூசை மச்சாது (48) என்பவருக்கும் சுமார் 20 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரவி பலமுறை கண்டித்து உள்ளார். ஆனால் மாலா, சூசை மச்சாதுடனான பழக்கத்தை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது.
திராவகம் வீச்சு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வேலையை முடித்துவிட்டு ரவி வீட்டுக்கு வந்தார். அப்போது மாலா, சூசை மச்சாது ஆகியோர் வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தனர். இதனை பார்த்த ரவி சத்தம் போட்டு உள்ளார்.
அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவி வீட்டில் ஒரு வாளியில் இருந்த திராவகத்தை எடுத்து வந்து மாலா, சூசை மச்சாது ஆகியோர் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் சூசை மச்சாது மகன் கெல்வின் (19) என்பவர் அங்கு வந்தார். அப்போது, அவர் மீதும் ரவி திராவகத்தை ஊற்றிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
போலீஸ் வலைவீச்சு
இதில் பலத்த காயம் அடைந்த மாலா, சூசை மச்சாது, கெல்வின் ஆகியோர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மாலா மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய ரவியை வலைவீசி தேடி வருகிறார்.
தூத்துக்குடியில் பெண் உள்பட 3 பேர் திராவகம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.