மாவட்டத்தில் இன்று முதல் 443 அரசு பஸ்கள் இயக்கம்: பஸ் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் 443 அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று நடைபெற்றது.
தர்மபுரி:
தொற்று குறைந்தது
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொற்று பாதிப்பு குறைவாக உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்கள் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அரசு பஸ்களில் உள்ள பழுதுகளை நீக்கும் பணி நடைபெற்றது. தொழில்நுட்ப பணியாளர்கள் கொண்டு பஸ்களில் பழுது நீக்கப்பட்டது. அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வரும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
443 பஸ்கள் இயக்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டலத்தில் 155 புறநகர் பஸ்கள், 251 டவுன் பஸ்கள், 37 ஸ்பேர் பஸ்கள் என மொத்தம் 443 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களை தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட உள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் அந்தந்த பகுதி உள்ளாட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர்.
தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையத்தில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கோவிந்தராஜன் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
தனியார் பஸ்கள் ஓடாது
இதனிடையே தர்மபுரி மாவட்டத்தில் தனியார் பஸ்கள் இயக்க வாய்ப்பில்லை என்று அதன் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஸ்களை இயக்க முடியாத நிலையில் உள்ளோம். 100 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்க அனுமதித்தால் மட்டுமே தனியார் பஸ்களை இயக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் தனியார் பஸ்கள் ஓடாது என்று தெரிகிறது.