ஆலந்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 3 டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்
ஆலந்தூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 3 டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்.
ஆலந்தூர்,
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதி மக்கள், நலச்சங்கங்களின் குறை தீர்வு முகாம் நங்கநல்லூரில் நடந்தது. முகாமுக்கு ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தலைமை தாங்கினார். மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர்கள் என்.சந்திரன், நாஞ்சில் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-
இந்த தொகுதியில் பட்டா, மின்சார பிரச்சினை அதிகம் உள்ளது. மின்சார பிரச்சினை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 3 டாஸ்மாக் கடைகள் விரைவில் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் செயற்பொறியாளர்கள் முரளி, ராஜசேகர், சென்னை குடிநீர் வாரிய என்ஜினீயர் ஜான்சிராணி, தாசில்தார் சரவணன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.