தென்காசியில் கோவில் பணியாளர்கள் 91 பேருக்கு நிவாரண உதவி
தென்காசியில் கோவில் பணியாளர்கள் 91 பேருக்கு நிவாரண உதவிகளை கலெக்டர் கோபால சுந்தரராஜ் வழங்கினார்.
தென்காசி:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் மாத சம்பளம் இல்லாமல் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்ட கோவில் பணியாளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று தென்காசி, செங்கோட்டை, வீரகேரளம்புதூர், ஆலங்குளம் தாலுகாக்களில் அமைந்துள்ள கோவில்களில் பணியாற்றும் 91 பேருக்கு நிவாரண உதவி, தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் உள்ள கலையரங்கில் வைத்து வழங்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தனுஷ்குமார் எம்.பி., பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவசங்கர ஓதுவார் இறைவணக்கம் பாடினார். அறநிலையத்துறை உதவி ஆணையர் அருணாசலம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன், நகர செயலாளர் சாதிர், ஒன்றிய செயலாளர் ஏ.ஆர்.எம்.அழகுசுந்தரம், காங்கிரஸ் நகரத் தலைவர் காதர் மைதீன், தென்காசி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஷமீம் இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி நன்றி கூறினார்.