மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

தக்கலை அருகே மனைவிக்கு குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-06-26 21:43 GMT
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே மனைவிக்கு குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
காதல் திருமணம்
தக்கலை அருகே திருவிதாங்கோடு புதுதெரு பகுதியை சேர்ந்தவர் சியாத் (வயது 30), சமையல் வேலைபார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த தாஸ்லீமா (28) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் இருந்த நிலையில், கடந்த மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் சியாத், தக்கலை செட்டியார்விளையை சேர்ந்த உறவினர் சோயாப் ( 28) என்பவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து குமாரபுரத்தில் இருந்து தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார். சரல்விளையை கடந்து சென்றபோது அந்த வழியாக நாய் ஒன்று குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது.
பரிதாப சாவு
இதில் மோட்டார் சைக்கிள்  நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டு இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தக்கலை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து சியாத் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சியாத் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மனைவிக்கு குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் வாலிபர் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்