ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் ராஜாநகர் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக நெல்லை மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ஒரு வீட்டில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்துவதற்காக காரில் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 30 மூட்டைகளில் இருந்த 900 கிலோ ரேஷன் அரிசியுடன் காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக மேலப்பாளையம் ராஜா நகரைச் சேர்ந்த வெங்கடாஜலபதி (வயது 60), பழனிகுமார் (32), திருமலைகொழுந்து புரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஆறுமுகம் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் மேலப்பாளையம் அழகிரிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, கீழப்பாட்டத்தை சேர்ந்த பேச்சிமுத்து (40) என்பவர் மோட்டார் சைக்கிளில் 3 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ரேஷன் அரிசியுடன் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.