மாயமான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கிய நிலையில் மீட்பு

திசையன்விளை அருகே மாயமான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2021-06-26 20:41 GMT
திசையன்விளை:
திசையன்விளை அருகே உவரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கோபி (வயது 39). இவர் நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு சென்று விட்டு, இரவில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு குடும்பத்தினர் தொடர்பு கொண்டாலும் கோபி பேசவில்லை.

இதையடுத்து, கோபியின் மனைவி ராஜேசுவரி தனது கணவர் மாயமானதாக உவரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனே போலீசார் பல்வேறு இடங்களிலும் சப்-இன்ஸ்பெக்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இடையன்குடி- உவரி ரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் ஒற்றையடி பாதையில் நேற்று காலையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் அவர் மீது விழுந்து கிடந்தது.

நேற்று காலையில் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முந்திரிதோப்பு உரிமையாளர், கோபியை மீட்டு உவரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் கோபிக்கு திசையன்விளை தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசாரின் விசாரணையில், கோபி முந்திரி பழம் பறிக்க சென்றபோது, உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கியது தெரியவந்தது.

மேலும் செய்திகள்