வடிவேல் பட நகைச்சுவை பாணியில் ‘சிவன் கோவிலை காணவில்லை’ என கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் புகார்; சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு
வடிவேல் பட நகைச்சுவை பாணியில் சிவன் கோவிலை காணவில்லை என்று ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் புகார் மனு கொடுத்தனர். சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெருந்துறை
வடிவேல் பட நகைச்சுவை பாணியில் சிவன் கோவிலை காணவில்லை என்று ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் புகார் மனு கொடுத்தனர். சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிணற்றை காணோம்
‘நகைச்சுவை நடிகர் வடிவேல் ஒரு படத்தில் நிலத்தில் உள்ள ஒரு கிணற்றை காணோம் என்று போலீசாரிடம் புகார் தெரிவிக்கும் நகைச்சுவை காட்சி இடம்பெற்று இருந்தது.
இதில் ஒரு கட்டத்தில் அந்த போலீஸ் அதிகாரி எனக்கு இந்த வேலையே வேண்டாம் என்று சென்று விடுவார். இந்த நகைச்சுவையை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.
இதேபோன்ற நகைச்சுவை சம்பவம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கோவிலை காணவில்லை
பெருந்துறை பா.ஜ.க.வினர், முன்னாள் மாநில பா.ஜ.க. பிற்பட்டோர் அணித் தலைவர் இமயம் சந்திரசேகர் தலைமையில், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள், ‘பெருந்துறையை அடுத்து உள்ள சீனாபுரம் முருகன் மலைக் கோவிலுக்கு அருகில் இருந்த சிவன் கோவிலையும், கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த மூலவர் சிலை, நந்தி சிலை, அம்பாள் சிலைகளையும் காணவில்லை’ என்று கூறி இருந்தனர்.
அதே நேரத்தில், இவைகள் எந்த நாளிலிருந்து காணவில்லை என்பது குறித்து, அந்த புகார் மனுவில் குறிப்பிடவில்லை.
இது குறித்து, பெருந்துறை தாசில்தார் கார்த்திக்கிடம் கேட்டபோது அவர், இந்த புகார் மனு தற்போது தான் எங்களுக்கு வந்துள்ளது. இது குறித்த தகவல் அனைத்தும், சீனாபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியும் என்று கூறினார்.
யாரும் ஆக்கிரமிக்கவில்லை
இதையடுத்து, சீனாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ரத்தினசாமியிடம் கேட்டபோது அவர்கூறியதாவது:-
புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சிவன் கோவில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே சிதிலமடைந்து விட்டது. பூஜை பரிகாரங்கள் எதுவுமில்லாமல் இடிபாடுகளுடன் கிடந்த கோவில் வளாகத்தை சுத்தம் செய்து, கடந்த 1998-ம் ஆண்டு கோவில் இருந்த இடத்தில் நியாய விலை கடை ஒன்றை அப்போதிருந்த ஆட்சியாளர்கள் கட்டிவிட்டனர்.
கோவில் நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. மேலும் கோவிலுக்கு சொந்தமான மூலவர் சிலை, நந்தி சிலை, அம்பாள் சிலை ஆகிய அனைத்தும், முருகன் மலைக்கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வடிவேலு பட பாணியில் உள்ள இந்த புகார்மனு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.