மர்மநபர் கொடுத்த மாத்திரையை தின்ற பெண் சாவு; 3 பேர் மருத்துவமனையில் அனுமதி-தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
சென்னிமலை அருகே கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மர்மநபர் கொடுத்த மாத்திரையை வாங்கி தின்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சென்னிமலை,
சென்னிமலை அருகே கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி மர்மநபர் கொடுத்த மாத்திரையை வாங்கி தின்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பாதிக்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விவசாய குடும்பம்
சென்னிமலை அருகே உள்ளது கே.ஜி.வலசு. இங்குள்ள பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பணகவுண்டர் (வயது 75). விவசாயி. இவருடைய மனைவி மல்லிகா (58), இவர்களுடைய மகள் தீபா (30). தீபாவுக்கு திருமணம் ஆகி கணவர் பிரபு (வயது 35) என்பவருடன் தனது தந்தை வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர்களுக்கு லோகித் (4) என்ற மகனும், லட்சிதா (1) என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் வசிக்கும் தோட்டத்து வீடு பெருமாள்மலை பகுதியில் தனியாக உள்ளது. நேற்று காலை தீபாவின் கணவர் பிரபு சென்னிமலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் கருப்பணகவுண்டர், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் இரு குழந்தைகளும் இருந்தனர்.
வாலிபர்
அப்போது இவர்களுடன் தோட்டத்தில் வேலை செய்யும் குப்பம்மாள் (65) என்ற பெண் மற்றும் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) ஆகியோரும் இருந்துள்ளனர்.
நேற்று காலை 8 மணிஅளவில் சுமார் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் அங்கு சென்று கருப்பணகவுண்டர் வீடு இதுதானே என்று கேட்டுள்ளார். அதற்கு வீட்டில் இருந்தவர்கள் ஆமாம் என கூறியுள்ளனர்.
கொரோனா பரிசோதனை செய்ய..
அப்போது அந்த வாலிபர், இந்த பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால் நான் உங்களை கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளேன். பரிசோதனை செய்வதற்கு முன் நீங்கள் அனைவரும் மாத்திரை சாப்பிட வேண்டும் என்றும், அதற்கு முதலில் வெந்நீர் கொண்டு வாருங்கள் எனவும் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு தீபா உடனடியாக வெந்நீர் தயார் செய்து கொண்டு வந்துள்ளார். அப்போது அந்த வாலிபர் முதலில் இந்த மாத்திரைகளை அனைவரும் சாப்பிடுங்கள். அதன்பிறகு உங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
மாத்திரை தின்றனர்
பல இடங்களில் கொரோனா பரிசோதனை நடந்து வருவதால் இதனை அந்த குடும்பத்தினர் நம்பி விட்டனர். அந்த வாலிபர் கொடுத்த கருப்பு நிறத்தில் இருந்த மாத்திரைகளை கருப்பணகவுண்டர், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் வேலை செய்யும் பெண் குப்பம்மாள் ஆகியோர் சாப்பிட்டுள்ளனர்.
ஆனால் அங்கிருந்த கல்யாணசுந்தரம் என்பவர் நான் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்துள்ளதால் எனக்கு வேண்டாம் என கூறியுள்ளார். பின்னர் மாத்திரை சாப்பிட்ட 4 பேரையும் ஒரு கருவி மூலம் பரிசோதனை செய்தார். பின்னர் உங்கள் யாருக்கும் கொரோனா இல்லை என கூறினார். பின்னர் தன்னை அந்த ஊரின் மெயின்ரோடு வரை கொண்டு சென்று விட்டுவிடுமாறு கல்யாணசுந்தரத்திடம் கூறி உள்ளார். உடனே அவர் மோட்டார் சைக்கிளில் மெயின்ரோடு வரை கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார்.
பெண் சாவு
அந்த வாலிபர் சென்ற சிறிது நேரத்தில் மாத்திரை சாப்பிட்ட 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தீபா தனது கணவர் பிரபுவுக்கு போன் செய்து இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக பிரபு வீட்டுக்கு விரைந்து சென்று மயக்கத்தில் இருந்த 4 பேரையும் தனது கார் மூலம் சென்னிமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் மல்லிகா பரிதாபமாக இறந்தார்.
3 பேர் மருத்துவமனையில் அனுமதி
இதனைத்தொடர்ந்து குப்பம்மாள் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கருப்பணகவுண்டர் மற்றும் அவரது மகள் தீபா ஆகியோர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நல்லவேளையாக குழந்தைகள் இருவருக்கும் மாத்திரை கொடுக்காததால் அவர்கள் தப்பித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் (சென்னிமலை), சண்முகசுந்தரம் (அறச்சலூர்) ஆகியோரும் உடன் சென்றனர்.
மேலும் ஈரோட்டில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சம்பவ வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னிமலை-கே.ஜி.வலசு ரோடு வரை ஓடிவிட்டு மீண்டும் வீட்டுக்கே திரும்ப வந்தது.
மாத்திரை கொடுக்க வந்த மர்ம நபர் அந்த வீட்டிற்குள் நுழையும் போதே வீட்டின் உரிமையாளர் பெயரை சொல்லி விசாரித்ததையும், கொரோனா பரிசோதனை செய்ததற்கு பணம் எதுவும் வாங்காமல் சென்றதையும் பார்க்கும் போது முன் கூட்டியே திட்டமிட்டு யாராவது இந்த செயலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பரபரப்பு
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மர்மநபர் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்தாரா? ஒருவர் மட்டும் மாத்திரை சாப்பிடாததால் மாட்டிவிடுவோம் என்ற பயத்தில் நைசாக அங்கிருந்து தப்பிச்சென்றாரா? வீட்டின் உரிமையாளர் பெயரை சொல்லி கேட்டதால் அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்குமா? அந்த மர்மநபர் யார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் மர்ம நபரின் நடமாட்டம் குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.