கர்நாடகத்தில் இதுவரை 37 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
கர்நாடகத்தில் இதுவரை 37 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராண் கூறினார்.
பெங்களூரு:
கொரோனா 2-வது அலை
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை தனது கோர முகத்தை காட்டியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தபட்டதாலும், மாநில அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையாலும் மாநிலத்தில் வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.
இந்த நிலையில் மாநிலத்தில் நேற்றைய கொரோனா நிலவரம் குறித்து அரசி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிகிச்சையில் உள்ளவர்கள்
கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 65 ஆயிரத்து 10 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 4,272 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 31 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 115 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 654 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 6,126 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 91 ஆயிரத்து 123 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 226 ஆக குறைந்துள்ளது. பெங்களூரு நகரில் அதிகபட்சமாக 955 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
மைசூருவில் 647 பேர், தட்சிண கன்னடாவில் 375 பேர், ஹாசனில் 320 பேர், குடகில் 183 பேர், மண்டியாவில் 134 பேர், சிவமொக்காவில் 217 பேர், கோலாரில் 134 பேர், பெலகாவியில் 115 பேர், சிக்கமகளூருவில் 200 பேர், குடகில் 160 பேர், துமகூருவில் 159 பேர், உடுப்பியில் 139 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 18 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 16 பேரும், தட்சிண கன்னடாவில் 14 பேரும், மைசூருவில் 22 பேரும், பல்லாரியில் 10 பேரும், தார்வாரில் 9 பேரும் என மொத்தம் 115 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 6 மாவட்டங்களில் புதிதாக யாரும் இறக்கவில்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பீதரில் கொரோனா பரவல் ஏறத்தாழ முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. அந்த மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாநிலத்தில் கொரோனா வைரல் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வீடு, வீடாக தடுப்பூசி
எனது தொகுதியான மல்லேசுவரத்தில் 81 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த பணியை மேற்கொண்டோம். இப்போது வீடு, வீடாக சென்று தடுப்பூசி வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு தனியார் நிறுவனம் தாமாக முன்வந்து 5 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது. இதுவரை பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனங்கள் 12 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை நன்கொடையாக அரசுக்கு வழங்கியுள்ளது. மொத்தம் 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெறும் எண்ணம் அரசுக்கு உள்ளது.
அலட்சியமாக இருக்கக்கூடாது
கொரோனா 3-வது அலை வந்தாலும் சரி, டெல்டா பிளஸ் வைரஸ் பரவினாலும் சரி, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அவற்றை நாம் தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும். யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது. கர்நாடகத்தில் இதுவரை 2 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 1.70 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.
30 லட்சம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் மொத்த மக்கள்தொகையில் 37 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மீதமுள்ள 63 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மத்திய அரசு அதிகளவில் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களும் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி வருகின்றன.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.