கரும்பு தோட்டத்துக்குள் சிறுத்தைப்புலி நடமாட்டம்?
சேலம் கந்தம்பட்டியில் கரும்பு தோட்டத்துக்குள் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சேலம்
சேலம் கந்தம்பட்டியில் கரும்பு தோட்டத்துக்குள் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சிறுத்தை புலி நடமாட்டம்?
சேலம் கந்தம்பட்டி பைபாஸ் ரோட்டில் கோனேரிக்கரை பகுதியை சேர்ந்த ஜனகராஜ் மனைவி வனிதா (வயது 32). இவரது வீடு அருகில் அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் சுமார் 2 ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளார். வனிதா நேற்று மாலை தனது உறவினர் பூங்கொடி என்பவருடன் மாட்டுக்கு புல் அறுப்பதற்காக கரும்பு தோட்டம் வழியாக நடந்து சென்றார். அப்போது கரும்பு தோட்டத்துக்குள் சிறுத்தைப்புலி ஒன்று பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து அவர்கள் தங்களது உறவினர்களிடம் தெரிவித்தனர். தொடர்ந்து சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீவிர தேடுதல் வேட்டை
அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில் உதவி வன பாதுகாவலர்கள் ராஜேஷ் மீனா, கண்ணன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட வன காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கரும்பு தோட்டத்துக்குள் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதா? என தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். போதிய வெளிச்சம் இல்லாததால் கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கி இருந்தது சிறுத்தைப்புலி தானா? என்பதை உடனே உறுதி செய்ய முடியவில்லை.
சிறுத்தைப்புலி கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் அந்த பகுதி முழுவதும் பரவியது. ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காக அதிரடிப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். துப்பாக்கி ஏந்திய 2 வனக்காவலர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். பைனாகுலர் மூலமாக கரும்பு தோட்டத்துக்குள் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
உறுதி செய்யப்படவில்லை
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் முருகன் கூறுகையில், சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து இந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுவரை சிறுத்தைப்புலி நடமாட்டத்தை எங்களால் உறுதிபடுத்த இயலவில்லை.
டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிறுத்தைப்புலி இருப்பது கண்டறியப்பட்டால் கூண்டுகள் வைத்தோ அல்லது வலைவிரித்தோ பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றார்.
அதிர்ச்சி அடைந்தோம்
சிறுத்தைப்புலி பார்த்ததாக தெரிவித்த வனிதா என்பவர் கூறுகையில், நானும், பூங்கொடியும் மாட்டுக்கு புல் அறுப்பதற்காக சென்ற போது கரும்பு தோட்டத்துக்குள் சிறுத்தைப்புலியை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். அதனுடைய வால் நீளமாக இருந்தது. மேலும் சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து காலையிலேயே இந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் சிலர் எங்களிடம் தெரிவித்தனர். ஆனால் நாங்கள் அதை நம்பவில்லை. மாலையில் நேரில் பார்த்த பிறகுதான் நம்பினோம். இந்த சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்ய வேண்டும் என்றனர்.
இரவு சுமார் 8.30 மணி அளவில் கரும்பு தோட்டத்தில் சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. மேலும் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்த தகவலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் கந்தம்பட்டி பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து அங்கு வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். சிறுத்தைப் புலி நடமாட்டம் உள்ளதா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே விடக்கூடாது. அதேபோன்று ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளையும் வீட்டை விட்டு வெளியே விட வேண்டாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.