குடிமங்கலம், ஜூன்.27-
குடிமங்கலம் ஒன்றியத்தில் சோமவாரப்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, எஸ். அம்மாபட்டி, ஆர்.ஜி.ரத்தினம் மாள்நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 8ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் பெதப்பம்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்கள் அதிக ளவில் ரோட்டில் சுற்றி திரிகின்றன. பெதப்பம்பட்டி நால்ரோட்டில் நாய்கள் தொல்லை அதிகளவில் இருப்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இரவு நேரங்களில் நாய்கள் ரோட்டில் சுற்றித் திரிவதால் வாகனங்களில் செல்பவர்கள் நாய்கள் மீது மோதி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.