பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தீர்வு காணப்படும் டி.ஐ.ஜி. ராதிகா தகவல்

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-26 18:33 GMT
திருச்சி, 
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா தெரிவித்துள்ளார்.

உதவி மையம்

புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலும் பெண்கள் உதவி மையம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா திருச்சி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 

இதில் பெண்கள் உதவி மையத்திற்கு நியமிக்கப்பட்ட பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி வரவேற்றார். திருச்சி சரக டி.ஐ.ஜி. ராதிகா பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

உடனடி தீர்வு

பின்னர் டி.ஐ.ஜி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் நிர்பயா திட்ட நிதியின் கீழ் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூரை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் பெண்கள் உதவி மையம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க 181 என்ற உதவி எண் கொடுக்கப்பட்டுள்ளன. 

இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும். இந்த சேவை திருச்சி மாவட்டத்தில் 15 போலீஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் 2 பெண் போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. பின்னர் இருசக்கர வாகனங்களை டி.ஐ.ஜி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் சமூக நலத்துறை, மருத்துவம் மற்றும் உளவியல் துறை, தொழிலாளர் நலத்துறை, மகளிர் திட்டம் போன்ற துறைகளுடன் இணைந்து பெண்கள் தொடர்பான பிரச்சினைகள், அவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தீர்வு காணப்படும். மேலும் ஆதரவற்றோருக்கு அடைக்கலம் அளிக்கவும், பொருளாதார வசதி செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்து தரப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சமூக நலத்துறை அதிகாரி தமீம்முன்னிஷா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய சேர்மன் கமலா, மனநல மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி அனிதா, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் யசோதா ஆகியோர் போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.

மேலும் செய்திகள்